செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது

சென்னையில் செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநில ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-02 19:29 GMT

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 18). ராயப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஓன்றில் வேலை செய்கிறார். இவர் நேற்று முன்தினம் அண்ணா சாலையில் சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார், அப்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். கையில் வைத்திருந்த செல்போன் ஒன்றை பிரசாந்த்திடம் காட்டினார்கள்.

அந்த செல்போன் விலை ரூ.60 ஆயிரம் என்றும், அவசரமாக பணம் தேவைப்படுவதால் அந்த செல்போனை பாதி விலைக்கு அதாவது ரூ.30 ஆயிரத்துக்கு கொடுப்பதாகவும் கூறினார்கள்.

செல்போனை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கிக்கொள்ள பிரசாந்த் சம்மதித்தார். ரூ.30 ஆயிரத்தையும் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து எண்ணிகொண்டிருந்தார்.

உடனே மர்மநபர்கள் இருவரும் பிரசாந்திடம் இருந்து பணத்தை பிடுங்கினார்கள். செல்போன் இருப்பதாக பார்சல் ஒன்றை அவாிடம் கொடுத்தனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அவர்கள் போனபிறகு பிரசாந்த் பார்சலை பிரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் செல்போன் இல்லை.

செல்போன் போல உருவாக்கப்பட்ட கிரானைட் கல் இருந்தது. தன்னை மோசம் செய்த மர்ம நபர்கள் மீது பிரசாந்த் ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தப்பி ஓடிய மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கலீத்அன்பி (வயது 28), முகமதுநதீம் (35) என்று தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இதுபோல சென்னையில் செல்போன் என்று கிரானைட் கற்களை கொடுத்து நிறைய பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். எழும்பூர், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து 8 செல்போன்களும், 5 செல்போன் போன்ற கிரானைட் கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்