ராமநாதபுரம் வாலிபர் உள்பட 3 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
ராமநாதபுரம் வாலிபர் உள்பட 3 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி ரோடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் இளங்கோவன் (வயது21). மெரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவரின் நண்பரான ராமநாத புரம் வாஞ்சிநாதன் என்பவர் கப்பலில் வேலை உள்ளதாக முகநூலில் விளம்பரம் வந்துள்ளதாக கூறி தந்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டபோது ரஷ்யநாட்டு கப்பலின் கேப்டன் தீபக் மிஸ்ரா என்று அறிமுகம் செய்து கொண்ட நபர் கப்பலில் என்ஜினீயர் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்து அதற்காக தேவையான ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார். இதனை கேட்டு மகிழ்ந்த இளங்கோவன் ஆவணங்களை அனுப்பி வைத்து உள்ளார். அதன்பின் தொடர்பு கொண்ட நபர் வேலை தயாராகி விட்டதாகவும் இதற்காக தூத்துக்குடிக்கு வரும்படியும் அங்கு கப்பலில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இந்த வேலைக்காக பல்வேறு காரணங்களை கூறி ரூ.2 லட்சம் பணம் கேட்டு அதனை பெற்றுக் கொண்டனர். இளங்கோவனை போன்றே வாஞ்சிநாதனின் தகவலின்பேரில் அவரின் நண்பர்களான பெரம்பலூரை சேர்ந்த வெங்கடேஷ், சிதம்பரம் கிஷோர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சத்து 80ஆயிரம் பணத்தினை மேற்கண்ட மர்ம நபரிடம் செலுத்தி உள்ளனர். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில் தூத்துக்குடிக்கு வரும்படி அழைத்ததால் அங்கு துறைமுகத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து செல்போனில் தொடர்பு கொண்ட நபர் மேலும் பணம் கேட்டதால் இளங்கோவன் உள்ளிட்டோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கிருந்த அதிகாரிகளிடம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கான ஆவணங்களை காட்டி விவரம் கேட்டுள்ளனர். ஆவணங்களை பார்த்த துறைமுக அதிகாரிகள் அவை அனைத்தும் போலியானவை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் ரஷ்ய நாட்டு கப்பலின் கேப்டன் என்று கூறி கப்பலில் வேலை ஏற்பாடு செய்வதாக போலியான ஆவணங்களை தயார் செய்து தங்களிடம் ரூ.5 லட்சத்து 60ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.