சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் சாயல்குடி பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே செல்வதற்கு இடையூறாக உள்ள பேரூராட்சி எண் 1 மற்றும் 2 ஆகிய கடைகளை அகற்றி வழிவகை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு, துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ்:- வார்டு உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வி.வி.ஆர். நகர் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மயானத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். காமராஜ்:- பஜார் பகுதியில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திராணி:- மாதவன் நகரில் குறைந்த அழுத்த மின்சாரம் உள்ளது. அங்கு கூடுதல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வீடுகளுக்கு குடிநீர் பைப் லைன் அமைத்து தர வேண்டும். இந்திரா செல்லத்துரை:- எனது பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். இதேபோல் உறுப்பினர்கள் மாணிக்கவள்ளி பால்பாண்டியன், அழகுவேல் பாண்டியன், மாணிக்கவேல் பானுமதி, கோவிந்தன் உள்ளிட்டோர் பேசினர்.