நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
இன்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
சென்னை,
பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கஞ்சா வைத்திருந்தது உள்பட மொத்தம் 16 வழக்குகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ரத்து செய்தது.
இதையடுத்து மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சவுக்கு சங்கர் மீது 2-வது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலையானார்.
சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர், "முன்பு இருந்தது போல தொடர்ந்து செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வேன். சில காலங்களுக்குப் பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கத் தொடங்கும்" என்று பேட்டியளித்தார்.
இந்த நிலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.