சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்; 400 பேர் கைது
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 400 பேரை போலீசார் கைது செய்தனர்.;
விருதுநகர்,
சாலை மறியல்
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், முருகாயி, மாவட்ட செயலாளர் தமிழரசி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சித்ரா, அய்யம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
400 பேர் கைது
வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்கக்கூடிய ரூ.8,750 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து காலி பணியிடங்களிலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணியமர்த்தி முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.
போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.