அரசு பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி

பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.;

Update: 2022-11-08 20:01 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாணவிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

அரசு பள்ளி மாணவிகள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் நரேந்திரமோடி ஐ.நா. சபையில் பேசுகையில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி 75 மாணவர் செயற்கைக்கோள் இந்தியாவில் இருந்து ஏவப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதன் பேரில், தமிழகத்தில் இருந்து ஒரு மாணவர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு அகத்தியம் சுற்றுச்சூழல் மாணவர் செயற்கைக்கோள் என பெயரிடப்பட்டு உள்ளது.

செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி

பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகளான கலைமகள், கவுசல்யா ஆகிய 2 மாணவிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்கான முதல் கட்ட பயிற்சியை வெற்றியுடன் முடித்துள்ளனர். இந்த திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 86 மாணவர்கள், 26 ஒருங்கிணைப்பாளர்கள் 26 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கான செயற்கைக்கோள் தயாரிக்கும் பயிற்சி, மூத்த விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளை மூலம், இணையவழியாக ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அவருடன் இணைந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளான ஆர்.எம். வாசகம், ஆர்.வெங்கடேசன், வி.சசிகுமார், இளங்கோவன் ஆகியோரும், தொடர்ந்து இணைய வழியாக வகுப்பு நடத்தி வருகிறார்கள்.

இயங்கும் விதம்

இந்தியாவின் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவிகள் இஸ்ரோவின் முக்கிய இடங்களான யூ.எஸ்.ராவ் ஸ்பேஸ் சென்டர், நியூ டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் லிக்யூடு புரொபெலன்ட் சிஸ்டம் சென்டர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று செயற்கைக்கோளின் பகுதிகள் தயாரிக்கப்படும் விதம் மற்றும் அவை எவ்வாறு இயங்குகிறது என்பதையும் பார்வையிட்டனர்.பயிற்சியில் மாணவிகள்இஸ்ரோவின் மூத்த அறிவியல் விஞ்ஞானிகளான ஆர்.எம். வாசகம், மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் ஆகியோரை நேரடியாக சந்தித்து தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

பாராட்டு

முதல் மாணவர் செயற்கைக்கோளை ஏவுவதற்கான முதல் கட்ட பயிற்சியை முடித்து திரும்பிய மாணவிகள் கலைமகள், கவுசல்யா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சத்யா ஆகியோரை தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திராவிடச் செல்வன், தலைமை ஆசிரியை பாமா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்