சந்தானராமசுவாமி கோவில் குடமுழுக்கு
நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தானராமசுவாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761-ம் ஆண்டுகட்டப்பட்டது. இந்த மன்னருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடையலாம் என்பது ஐதீகம்.
குடமுழுக்கு
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடந்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக ஆச்சார்யார்கள், எஜமானர்கள் அழைப்பு, யாகபூஜைகளும், நித்யஹோமங்கள் மகாபூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம்புறப்பாடு, காலை 11.15 மணிக்கு பெருமாள் விமானம், ராஜகோபுர விமானம் மற்றும் இதர விமான கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
இதில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் நாராயணன் மற்றும் வேதவிற்பன்னர்கள் குடமுழுக்கை நடத்தினர்.இரவு சந்தானராமர் திருவீதி புறப்பாடும், நாதஸ்வர இன்னிசைக்கச்சேரியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் ஜெயபால், செயல்அலுவலர் மணிகண்டன் மற்றும் , சந்தானராமர் சேவாடிரஸ்ட் அமைப்பினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.