ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைப்படுத்த ஆதரவு தரவேண்டும்

Update: 2022-11-26 17:10 GMT


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி கருத்துக்களை கேட்டு வருகிறார். அதன்படி காணொலிக்காட்சி மூலமாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பங்கேற்று பேசியதாவது:-

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தாலும், உலக கரன்சிகளை போல் பெருமளவு சரியவில்லை. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விசயம். இது நமது பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு ஆகும். சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைப்படுத்த உரிய ஆதரவு தர வேண்டும். சந்தைப்படுத்துவதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 0.5 சதவீதம் கார்பஸ் நிதியுடன் ஒரு ஏற்றுமதி மேம்பாட்டு நிதியை உருவாக்க வேண்டும். இதற்காக ஏற்றுமதியாளர் செலவுக்கு உரிய அதிகபட்ச வரி விலக்கு அளிக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விகிதம் தற்போது 11 சதவீதம் முதல் 13 சதவீதத்தில் உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன் இருந்த வட்டி சமன்படுத்தும் பலன்களான 5 சதவீதம் உற்பத்தி நிறுவனங்களுக்கும், 3 சதவீதம் பிற நிறுவனங்களுக்கும் மீட்டெடுக்க வேண்டும்.

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜி.எஸ்.டி. ரீபண்ட் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது சுற்றுலா மட்டுமில்லாமல் கைவினை பொருள், நகை, தரை விரிப்புகள், ஜவுளி, காதி, தோல் பொருள், மூலிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

---

பியோ தலைவர் சக்திவேல்.

மேலும் செய்திகள்