சங்கராபுரம் மணியாற்றில் ஆற்று திருவிழா
காணும்பொங்கலையொட்டி சங்கராபுரம் மணியாற்றில் நடைபெற்ற ஆற்று திருவிழாவில் பாலசுப்பிரமணியர், பார்த்தசாரதி சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது;
சங்கராபுரம்
ஆற்றுத்திருவிழா
பொங்கல் பண்டிகை முடிந்து வரும் 5-வது நாள் ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகளை அலங்கரித்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று தீர்த்தவாரி நடைபெறும்.
ஆனால் சங்கராபுரத்தில் மட்டும் ஆண்டுதோறும் காணும்பொங்கல் அன்று அங்குள்ள மணியாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆற்றுத்திருவிழா நேற்று நடைபெற்றது.
சாமிகளுக்கு தீர்த்தவாரி
இதையொட்டி சங்கராபுரம் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி உள்ளிட்ட கோவில்களில் உற்சவம் மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக சங்கராபுரம் மணியாற்றுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
இதில் சங்கராபுரம், பாண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். பின்னர் தாங்கள் கொண்டுவந்த உணவை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் ஆற்றில் உற்சாகத்துடன் விளையாடினர். விழாவையொட்டி ஆற்றின்கரையோரம் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுக்க சங்கராபுரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவதால் தேவபாண்டலம் பாலம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் சாமி ஆற்றுத்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என பக்தர் ஒருவர் தெரிவித்தார்.