தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்; 146 பேர் கைது

கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-12 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 146 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலர் மணிகண்டன், துணை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியின் படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்கின்ற அனைத்து பிரிவு ஒப்பந்த ஊழியர்களையும் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.

146 பேர் கைது

இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 146 பேரை கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்