தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டம்

நெல்லையில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-17 19:00 GMT

சுய உதவி குழுக்களின் கீழ் பணி புரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை அளிப்பதற்காக நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முன்பு திரண்டனர்.

அப்போது, நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் மோகன் தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தற்போது தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் இந்த தூய்மை பணியாளர்களை ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. எங்கள் போராட்டத்தின் காரணமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கத்திற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் உத்தரவு அடிப்படையில் தினசரி சம்பளம் ரூ.480 வழங்கி விடுவதாகவும், சுய உதவிக்குழு தூய்மை தொழிலாளர்கள் சுய உதவி குழுவாகவே நீடிப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். இதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தற்போது சுய உதவிக்குழு தலைவர் மற்றும் செயலாளர்களிடம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குழு தலைவர் மற்றும் செயலாளர் கையெழுத்திட வேண்டும் என்றும் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்க கூடாது. ஒப்பந்ததாரர்களிடம் சுய உதவி குழு தொழிலாளர்களை ஒப்படைக்ககூடாது என்று கூறியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக சாலை மற்றும் மாவட்ட அறிவியல் மைய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று (புதன்கிழமை) மேலப்பாளையம் சந்தை பகுதியிலும், நாளை (வியாழக்கிழமை) ஒவ்வொரு மண்டல அலுவலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்