தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
உபதலை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.;
ஊட்டி,
உபதலை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி உபதலை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உபதலை ஊராட்சியில் 24 பேர் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் கேட்ட போது, எங்களை மிரட்டி வருகிறார். நாங்கள் அன்றாட கூலிக்காரர்கள். மிக குறைந்த ஊதியம் இருந்த போதிலும், எங்களுடைய ஊராட்சி என்ற உணர்வோடு இதுவரை தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தோம்.
ஊதியம் வேண்டும்
கொரோனா காலத்தில் மக்களின் சேவையில் ஈடுபட்டோம். ஆனால், அரசால் எங்களுக்கு வழங்கப்படும் முககவசம், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்கப்படுவது இல்லை. நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.100 என 26 நாட்களுக்கு ரூ.2,600 வழங்கப்படுகிறது. இந்த ஊதியமும் முறையாக வழங்கப்படுவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 88 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சக்கர நாற்காலி
மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நீலம்மாள் என்பவருக்கு ரூ.7,900 மதிப்பில் சக்கர நாற்காலி, குன்னூர் தாலுகா ஒட்டுப்பட்டரை வள்ளுவர் நகரை சேர்ந்த சித்ரா என்பவருக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில், கனரா வங்கி மூலம் ரூ.10.70 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.44 லட்சம் மதிப்பிலான ஆட்டோ லோடிங் கான்கிரீட் கலவை எந்திரத்திற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.