புழுதி பறப்பதால் மணல் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
மோகனூரில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் மணல் லாரியை சிறைபிடித்தனர்.;
மோகனூர்
மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு அள்ளப்படும் மணலை டிப்பர் லாரிகள் மூலமாக நாவலடியான் கோவில், முத்துராஜா தெரு, அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வளையப்பட்டி சாலையில் உள்ள செவிட்டு ரங்கன்பட்டி கூட்டுறவு வங்கி அருகில் ஒரு இடத்தில், விற்பனைக்கு இருப்பு வைக்கப்படுகிறது. மணலை டிப்பர், டாரஸ் போன்ற லாரிகள் மூலம் கொண்டு போகும்போது வாகனங்களில் மணல் தூகள்கள் பறக்காமல் இருப்பதற்கு படுதா போட்டு மூடி செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த வாகனங்களும் மணலின் மேல் படுதா போட்டு எடுத்து செல்வதில்லை. அதனால் தார் சாலைகளில் இருந்து மண் துகள் மற்றும் புழுதி பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. அதனால் வீடு முழுவதும் மணல் துகள் பறந்து காணப்படுகிறது என கூறி அந்த பகுதி பொதுமக்கள் மணல் லாாியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த மணல் குவாரி பணியாளர்கள் அவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் லாரிகள் செல்லும்போது சாலைகளில் தண்ணீர் விடப்படும் என கூறினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.