பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும்

பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2023-10-09 17:12 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 459 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா

கூட்டத்தில் பேரணாம்பட்டு தாலுகா பல்லலகுப்பம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் சுமார் 30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எலி, ஈசல் பிடித்தல், தேன் எடுத்தல், கிழங்கு தோண்டுதல் மற்றும் விவசாய கூலிவேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். பல ஆண்டுகளாக வாடகை மற்றும் குடிசை வீட்டில் வசித்து வரும் நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மணல் குவாரி

அணைக்கட்டு தாலுகா பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம், அனங்காநல்லூர் ஆகிய பாலாற்று பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு எடுத்துள்ளது. இந்த குவாரி அமைப்பதன் மூலம் கூத்தம்பாக்கம், சீதாபுரம், அகரம்சேரி, கொத்தகுப்பம் உள்ளிட்ட 50 கிராமங்களில் விவசாயத்துக்கு நீர் ஆதாரம் இன்றி பாதிப்பு ஏற்படும். நிலத்தடி நீர் வற்றிபோக வாய்ப்புள்ளது. எனவே பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மூதாட்டி மயக்கம்

குறை தீர்வு கூட்டத்தில் மனுவை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே சரிந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மீட்டு உடனடியாக முதலுதவி அளித்தனர். பின்னர் போலீசார் மூதாட்டியிடம் விசாரித்தபோது அவர் லத்தேரி காந்திநகரை சேர்ந்த அமராவதி (வயது 65) என்பதும், தங்கள் தெருவை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை அகற்றக்கோரி மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்று மனுவை கொடுத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வர் பிரச்சினை

கடந்த வாரம் திங்கட்கிழமை காந்திஜெயந்தி விடுமுறை என்பதால் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை. அதனால் நேற்று நடந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மனுவை பதிவு செய்வதற்காக நீண்டவரிசையில் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையே சர்வர் பிரச்சினை காரணமாக மனுக்களை உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை. அதனால் பொதுமக்கள் வெகுநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்