வெள்ளையாற்றின் நடுவில் மணல் திட்டை அகற்ற வேண்டும்

வேளாங்கண்ணி அருகே செருதூரில் வெள்ளையாற்றின் நடுவில் உள்ள மணல் திட்டை அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-08-24 18:45 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே செருதூரில் வெள்ளையாற்றின் நடுவில் உள்ள மணல் திட்டை அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் திட்டு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்து செருதூர் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 1100 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது. படகுகள் செல்ல முடியாதபடி மணல் திட்டுகள் தேங்கி உள்ளதோடு படகு ஒன்றுடன் ஒன்று மோதியும், படகின் அடிப்பகுதி மணலில் தரைத்தட்டியும் விபத்து ஏற்படுகிறது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகுகள் சேதம் அடைவதுடன், சில சமயங்களில் மீனவர்கள் உயிரிழப்பும் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள செருதூர் கிராம வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளை நேரில் ஆய்வு செய்து, அந்த மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை காக்க...

மேலும் தூண்டில் வளைவு அமைத்தும் செருதூர் மற்றும் வேளாங்கண்ணி மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 20 நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதித்து நிற்கும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்