சாம்பசிவபுரம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
சாம்பசிவபுரம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஆரணி
சாம்பசிவபுரம் பகுதி சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர், பி.ஆர்.நகர், மற்றும் அக்ராபாளையம் சாலையில் சாம்பசிவபுரம் பகுதி சாலை மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் அக்ராபாளையம் ஊராட்சிக்கும், சேவூர் ஊராட்சிக்கும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த அக்ராபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பார்த்தீபன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் சாலை மறியலில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.