சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

மணல்மேடு பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update:2023-09-24 00:15 IST

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சம்பா சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கொற்கை, வில்லியநல்லூர், கடுவங்குடி, பட்டவர்த்தி, திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், தலைஞாயிறு, மண்ணிப்பள்ளம், வரதம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள், தங்களது வயலை நன்றாக உழுது நேரடி மற்றும் பாய் நாற்றங்கால் முறையில் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள நடுத்திட்டு கிராம விவசாயிகள் கூறுகையில், முன்பு பெரும்பாலும் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நடைபெற்றது. ஆனால் இன்றைய கால சூழ்நிலை காரணமாக சம்பா, குறுவை சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் தாளடி சாகுபடியும் நடைபெறுகிறது.

விதைப்பு பணி

அந்த வகையில் தற்போது சம்பா பருவம் என்பதால் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக பம்புசெட் மூலம் வயலில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை நன்கு உழுது, வயல் விதைப்புக்கு பக்குவமான பிறகு பழமையான ஆடுதுறை-38 ரக நெல் விதைகளை கொண்டு பாய் நாற்றங்கால் தயாரித்து உள்ளோம்.

இதனை தொடர்ந்து 15 அல்லது 20 நாட்கள் கழித்து நாற்றுகளை பறித்து வயலில் நடுவோம். அதன் பின்னர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தை மாத அறுவடைக்கு சம்பா நெல்லை தயார்படுத்துவோம். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சம்பா விதைப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்