தீபாவளி பொருட்கள் விற்பனை அமோகம்: நெல்லையில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நெல்லையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.;
நெல்லையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலே பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். இதனால் தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
நெல்லையில் நள்ளிரவு வரையிலும் கடைகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.
போக்குவரத்து நெருக்கடி
பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் நேற்று காலையில் அதிக போக்குவரத்து நெரிசலின்போது லாரியும், காரும் உரசிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனே, போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வடக்கு புறவழிச்சாலை வழியாக வந்த கனரக வாகனங்களை மேம்பாலத்தின் அடிப்பகுதி வழியாக செல்ல அனுமதிக்காமல், மேம்பாலத்தின் மீது சுற்றி செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
இதேபோன்று நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகரில் 1,200 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் 800 பேர் என மொத்தம் 2 ஆயிரம் போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் காவலர் பயிற்சி பெற்றவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம், முருகன்குறிச்சி சாலை, பாளையங்கோட்டை சமாதானபுரம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள். டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கண்காணித்து வருகின்றனர்.
சிறப்பு ரெயில், பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் நெல்லைக்கு வந்தனர். நேற்று காலையில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு அதிகளவில் பயணிகள் வந்தனர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த சிறப்பு பஸ்கள் மூலமாகவும் ஏரளாமானவர்கள் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.