சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
சேலத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.;
சேலத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
சுகவனேசுவரர் கோவில்
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு இந்த கோவில் கும்பாபிஷேகத்தை மீண்டும் நடத்த கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.
இதையடுத்து கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு, மேற்கு ராஜகோபுரம், மூலவர் விமானங்கள், கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு திருப்பணி கடந்த மாதம் நிறைவடைந்தது.
பின்னர் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி கோவில் பகுதியில் 54 யாக குண்டங்களுடன் யாகசாலை அமைத்து கலசங்கள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. 4-ந் தேதி முதற்கால யாகபூஜையுடன் 120 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக பணிகளை தொடங்கினர்.
நேற்று முன்தினம் 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகளும், அஷ்டபந்தனம் சாத்துப்படியும் நடந்தது.
மகா கும்பாபிஷேகம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலையில் பரிவார சாமிகளுக்கு யாகபூஜை தொடங்கியது. பின்னர் பரிவார கலசங்கள் புறப்பட்டு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 6-ம் கால யாகபூஜை தொடங்கி அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, சொர்ணாம்பிகை அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், கலசங்கள் புறப்பாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் சிவ வாத்தியங்கள் முழங்க சமகால மகா கும்பாபிஷேகமும், சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பக்தர்கள் தரிசனம்
அப்போது, கோவில் உள்புறத்திலும், வெளிப்புற பகுதியிலும் நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷத்துடன் கோபுர தரிசனம் செய்தனர். இதையடுத்து கோபுர கலச தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், தொழில் அதிபர்கள் என்.சக்திவேல், மோகன், என்ஜினீயர் எஸ்.கே.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று மூலவர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பிரதான வழியாக சென்று மூலவர்களை தரிசனம் செய்துவிட்டு மேற்கு கோபுரம் வழியாக வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் மேற்கு கோபுரம் அருகே கோவில் சார்பிலும், இதர அமைப்புகள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரருக்கு திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.