சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த 3 மாதங்களில் சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.72¼ கோடி வருவாய் ஈட்டியது

சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த 3 மாதங்களில் சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.72¼ கோடி வருவாய் ஈட்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-07-06 21:37 GMT

சூரமங்கலம்:

வருவாய் அதிகரிப்பு

சேலம் ெரயில்வே கோட்டத்தில் வணிகத்துறை பிரிவு மூலம் வருவாயை பெருக்க ெரயில்வே நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் ெரயில்வே கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் 24.48 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 86 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு ரூ.72 கோடியே 37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதுவே கடந்த நிதி ஆண்டின் முதல் 3 மாதத்தில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 111 மெட்ரிக் டன் சரக்கு மட்டுமே கையாளப்பட்டுள்ளது. அப்போது ரூ.58 கோடியே 14 லட்சம் வருவாய் கிடைத்திருந்தது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரும்பு பொருட்கள்

கோவையில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், 4 லட்சத்து 69 ஆயிரம் டன் அளவுக்கு மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சரக்கு ெரயில்களில் அனுப்பப்பட்டன. கரூர் அருகே வீரராக்கியம் ெரயில் நிலையங்களில் இருந்து 1 லட்சத்து 91 ஆயிரம் டன் சிமெண்டு லோடு தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சரக்கு ெரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேச்சேரியில் இருந்து 84 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் சரக்கு ெரயில்கள் மூலம் காரைக்கால், சென்னை, அகமதாபாத் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பார்சல் சேவை

இதேபோல் பார்சல் சேவையிலும் சேலம் ரெயில்வே கோட்டம் அதிக வருவாயை ஈட்டி உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 892 குவிண்டால் அளவிற்கு பார்சல்களை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலத்தில் இருந்து ஜவுளி ரகங்கள், ஆத்தூரில் இருந்து பருத்தி விதைகள், நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு மற்றும் கோட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து காய்கறி லோடு, டிராக்டர்கள், ரிக்வண்டிகள் போன்றவற்றை பார்சல் ெரயில்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு பார்சல் ெரயில்கள் மூலம் 5 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, இதுவே கடந்த நிதியாண்டின் (2021-2022) முதல் மூன்று மாதத்தில் பார்சல் ெரயில்கள் மூலம் 4 கோடியே 56 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டியது. அதனுடன் ஒப்பிடுகையில் 25.16 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது, பார்சல் அளவை பொறுத்த அளவில் ரூ.42.85 சதவீதம் கூடுதலாக லோடு ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்