ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு

படிக்கட்டு அருகே பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Update: 2024-06-29 23:14 GMT

சேலம்,

சேலம் அருகே உள்ள டேனீஸ்பேட்டை-லோக்கூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் பத்தனவாடி கந்திலியை சேர்ந்த பிரகாசம் மகன் சக்திமகி (வயது 20) என்பது தெரியவந்தது. பிரகாசம் திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் மாணவர் சக்திமகி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும், நேற்று முன்தினம் மாலை ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்ல கோவை-சென்னை எக்ஸ்பிரசில் (வண்டி எண். 12676) முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டு அருகே பயணம் செய்த சக்திமகி ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்