மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்பனை - தமிழக அரசு
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் தாக்கத்தின் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அமைச்சர்களும், தொகுதி எம்.எல்.ஏக்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி, தரமாக வழங்குவதை உறுதிப்படுத்திடவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.