பூஜை பொருட்கள் விற்பனை

இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.;

Update: 2022-08-30 15:31 GMT
நாடு முழுவதும் இன்று(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று கடைவீதிக்கு சென்று ஆர்வமுடன் வாங்கினர்.

பூஜை பொருட்கள்

மேலும், விநாயருக்கு படைப்பதற்காக சுண்டல், அவல், பொரி, வாழைப்பழம், தேங்காய், ஊதுபத்தி, சாம்பிராணி, பொங்கல் செய்வதற்காக வெல்லம், பச்சரிசி, வாழை இலைகள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் மயிலாடுதுறை மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பூக்கள் விற்பனை

இது மட்டுமின்றி பூக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து பூ வியாபாரிகள் சிலர் கூறுகையில், விநாயகர் சதுர்த்திக்காக விற்பனை நல்லமுறையில் இருந்தாலும் அவ்வப்போது மழை வந்து மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால் பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்