திண்டுக்கல்லில் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்

திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. பொதுமக்கள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2022-10-03 19:30 GMT

ஆயுதபூஜை


ஆயுதபூஜை பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள். வீடுகளில் விவசாய கருவிகள், பிற வேலைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து பூஜை செய்வது வழக்கம்.


அதேபோல் கடைகளில் தராசு, எடைக்கற்கள் மற்றும் அளவீட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து வழிபடுவார்கள். இதுதவிர ஒர்க்‌ஷாப், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஆயுதபூஜை வழிபாடு மற்றும் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெறும். மேலும் ஒலிப்பெருக்கிகள் மூலம் பக்தி மற்றும் சினிமா பாடல்களும் ஒலிபரப்பப்படும்.


பொரி, கடலை


ஆயுதபூஜை வழிபாடு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவல், பொரி, கடலை, தேங்காய், வாழைப்பழம், சுண்டல் ஆகியவையே ஆகும். இதையொட்டி திண்டுக்கல்லில் நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, மேற்கு ரதவீதி, ஏ.எம்.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் நேற்று தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு அவல், பொரி விற்பனை படுஜோராக நடந்தது.


அதேபோல் பழக்கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது. அதேநேரம் சாலையோரங்களிலும் பல இடங்களில் பழக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஆப்பிள், மாதுளை, கொய்யா, விளாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட அனைத்து வகையான பழங்களையும் பொதுமக்கள் போட்டி, போட்டு வாங்கிச்சென்றனர். இதுதவிர பூஜைக்காக வாழைமர கன்றுகள், மாவிலை தோரணம் ஆகியவற்றையும் பொதுமக்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் வாங்கிச்சென்றனர்.


மல்லிகை பூ ரூ.1,100


மேலும் பூஜை பொருட்களை வாங்குவதற்கு திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் நேற்று திண்டுக்கல்லில் குவிந்தனர். அவல், பொரி, கடலை, பழங்கள், வாழை கன்றுகள் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கினர். இதனால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்தது.


ஆயுதபூஜை வழிபாட்டில் முதன்மையான இடம் பிடிக்கும் பூக்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்களின் விலையும் நேற்று பலமடங்கு அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை ஆன ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.1,100-க்கு விற்கப்பட்டது. அதேபோல் ரூ.400-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.300-க்கு விற்பனை ஆன ஜாதிப்பூ ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட பன்னீர் ரோஸ் ரூ.280-க்கும் நேற்று விற்பனை ஆனது.


நிலக்கோட்டை


ஆனாலும் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கிச்சென்றனர். மார்க்கெட் பகுதி என்று இல்லாமல் சாலையோரங்களிலும் பூக்கள் விற்பனை நடந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் நேற்று டன் கணக்கில் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 60 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனை ஆனது.


இதேபோல் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஆயூத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.450-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.850-க்கும், ரூ.250-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.550-க்கும், ரூ.300-க்கு விற்பனையான வெள்ளை பிச்சிப்பூ ரூ.600-க்கும், ரூ.200-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500-க்கும் நேற்று விற்பனை ஆனது. மற்ற பூக்களின் விலையும் சிறிதளவு மாறுதல்களுடன் விற்பனை செய்யப்பட்டது.


களைகட்டிய விற்பனை


ஆயுதபூஜையையொட்டி திண்டுக்கல் நகரில் உள்ள கடைவீதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது. இதன் காரணமாக நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடைவீதிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இரவு வரை நின்று போக்குவரத்தை சரிசெய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்