குளச்சலில் கரை திரும்பிய படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை
குமரி மேற்கு கடற்கரையில் தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.;
குளச்சல்:
குமரி மேற்கு கடற்கரையில் தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
மீன்பிடி தடைகாலம்
ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடை காலம் 2 பருவ காலமாக உள்ளது.
குமரி கிழக்கு கடற்கரை பகுதிகளாகிய கன்னியாகுமரி, சின்னமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கரை திரும்பின
அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் தடைகாலம் தொடங்கியது.
அதைதொடர்ந்து குளச்சல் மீன்பிடித்துறை முகத்தை தங்கு தளமாக கொண்ட சுமார் 300-க்கும் ேமற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து விட்டு கடந்த 31-ந்தேதி கரை திரும்பின. அவை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பின்னர், ஒரு நாளைக்கு 20 படகுகளில் இருந்து மீன்கள் இறக்கப்பட்டு துறைமுகத்தில் உள்ள ஏல கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
போட்டி போட்டு வாங்கினர்
அதன்படி கடைசி 20 படகுகளில் இருந்து நேற்று மீன்கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதில் ஒரு படகில் தக்காளி பேளை மீன்கள் இருந்தன. வேறு சில படகுகளில் நாக்கண்டம், கணவாய் போன்ற மீன்கள் இருந்தன.
இந்த மீன்களுக்கு சென்னை, திண்டுக்கல், கோவில்பட்டி, கோயம்புத்தூர் போன்ற வெளி மாவட்டங்களில் மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். மேலும், இந்த மீன்களில் இருந்து எண்ணையும் எடுக்கப்படுவதால் மீன் எண்ணெய் ஆலையினரும் வாங்கி சென்றனர்.
தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து வடநாட்டு மீன்பிடி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இந்த தடைகாலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.