கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-06-19 14:25 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 9 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது.

அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?. கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்?. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது?.

கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா?. போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும்.

கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுமையாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்