கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளார்கள்.;
நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஆல்துரை ஆகியோர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக நுகர்வோருக்கு விற்கப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை விட கூடுதலாக உள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவன பொது மேலாளரை தொடர்பு கொண்ட போது நீலகிரியில் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாலும், பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பால் பொருட்களுக்கு போக்குவரத்து செலவு அதிகம் என்றும் அதனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறுகிறார்.
இது தொடர்பாக அரசாணை எதுவும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்கப்படும் நிலையில் நீலகிரியில் மட்டும் அதற்கு கூடுதல் செலவாகிறது என்கிற வாதம் ஏற்கத்தக்கதல்ல. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரூ.35-க்கு விற்கப்படும் ½ லிட்டர் தயிர் வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூரில் ரூ.8 போக்குவரத்து செலவிடப்படுவதாக கூறுவது சரியல்ல. பொருளாதார ரீதியில் பின் தங்கி உள்ள நீலகிரி வாழ் மக்களை ஆவின் நிறுவனம் சுரண்டுகிறது. இது நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கு இணையான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.