ஆறுமுகநேரியில் சம்பள பாக்கி வழங்கக்கோரிதொண்டு நிறுவனத்தை ஆசிரியர்கள் 2-வது நாளாக முற்றுகை
ஆறுமுகநேரியில் சம்பள பாக்கி வழங்கக்கோரி தொண்டு நிறுவனத்தை ஆசிரியர்கள் 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
ஆறுமுகநேரி:
சம்பள பாக்கி வழங்கக்கோரி, ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவனத்தை 2-வது நாளாக ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டு நிறுவனத்தை ஆசிரியர்கள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்கள், ஆயாக்கள், காவலாளிகள் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்து வந்தனர். இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் டெபாசிட் தொகையை தொண்டு நிறுவனம் பெற்று கொண்டு, அவர்களுக்கு பணியிடம் வழங்கி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 6 மாதங்களாக தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் நேற்று முன்தினம் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் தொண்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தொண்டு நிறுவன நிர்வாகி பாலகுமரேசனை போலீசார் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முறையாக புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனினும் தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டவர்கள் இரவு வரையிலும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சிலர் இரவு முழுவதும் தங்கியிருந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக போராட்டம்
தொடர்ந்து நேற்று காலையில் 2-வது நாளாக தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள், பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.