மாற்றத்துக்கான அணியினர் துணைத்தலைவர் -நிர்வாகிகள் பதவிக்கு போட்டி

Update: 2022-09-27 16:15 GMT


சைமா சங்க தேர்தல் நாளை (வியாழக்கிழமை) திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மாற்றத்துக்கான அணி தரப்பில் துணைத்தலைவர் தலைமையில் மற்ற பதவிக்கு போட்டியிடுகிறார்கள். நூல் விலையை குறைந்தபட்சம் 3 மாதம் நிலையாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சைமா சங்க தேர்தல்

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தேர்தல் நாளை சைமா அலுவலகத்தில் நடக்கிறது. தலைவராக வைகிங் ஈஸ்வரன் மீண்டும் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். துணை தலைவர் உள்ளிட்ட மற்ற பொறுப்புகளுக்கு வைகிங் ஈஸ்வரன் தரப்பில் உள்ளவர்கள் போட்டியிடுகிறார்கள். அதுபோல் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் துணை தலைவர் பாலசந்தர் தலைமையில் அனைத்து பொறுப்புகளுக்கும் அவரது அணியினர் களம் காண்கிறார்கள்.

மாற்றத்துக்கான அணியின் சார்பில் போட்டியிடும் அணியினர் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. தேர்தல் பிரசாரம் மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரியா ஓசைரீஸ் உரிமையாளர் பாலசந்தர் கூறியதாவது:-

25 ஆண்டுகளாக சைமாவில் தேர்தல் நடைபெறாமல் நிர்வாகிகள் நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இன்றைய கால சூழ்நிலையில் தொழிலை தொடர்ந்து செய்யாதவர்களும் நிர்வாக குழுவில் தொடர்ந்து இருந்து வந்தனர். தொழில் செய்பவர்கள் நிர்வாக குழுவில் இடம்பெற்று இருந்தால் தொழில் நிலைமை குறித்து கலந்தாய்வு செய்யும்போது, தீர்வு கிடைக்கும். அதற்காக சங்கத்தில் புதிய நிர்வாக குழு வர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதற்கு அந்த தரப்பினர் செவிசாய்க்கவில்லை. பழைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதில் உடன்பாடு இல்லாததால் நாங்கள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்தோம். அதை ஏற்று தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நூல்விலை

சமூக அக்கறையுடன் தொழில் செய்பவர்களை ஒருங்கிணைத்து இந்த அணியில் எந்தவித பாகுபாடு பார்க்காமல் மாற்றத்துக்கான அணி என்ற தலைப்பில் போட்டியிடுகிறோம். ஆரம்பத்தில் சைமாவில் ஆயிரக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். பின்னர் சமீபத்தில் 200 பேராக குறைந்துவிட்டனர். சங்கத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் சந்தா கட்டாமல் இருப்பதாக பலர் தெரிவித்தார்கள். அதிகம்பேரிடம் பேசி நாங்கள் எடுத்துக்கூறியதால் 400-க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது உள்ளனர்.

4 ஆயிரம் உள்நாட்டு நிறுவனங்கள் இருந்தும், 400 உறுப்பினர்கள் மட்டுமே சைமா சங்கத்தில் உள்ளனர். 1 வருடத்துக்குள் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதே முதல் திட்டம். நூல் மில் உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, குறைந்தபட்சம் 3 மாதம் நூல் விலையை மாற்றக்கூடாது என்று வலியுறுத்த உள்ளோம். இதனால் சிறு பனியன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தொழில் செய்பவர்கள்

நிர்வாக குழுவில் இருப்பவர்கள் தற்போது தொழில் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தலைவர் ஏற்கனவே தொழிலில் உள்ளார். நூற்பாலை வைத்துள்ளோம். பஞ்சில் இருந்து ஆடை தயாரிப்பு வரை நிறைய அனுபவம் நிறைந்தவர் என்பதால், அவருடைய ஆலோசனையை பெறும் வகையில் தலைவராக நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாமோதரன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சுரேஷ்குமார், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடும் பழனிசாமி மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்