பாய்மர படகு போட்டி

மணமேல்குடி அருகே பாய்மர படகு போட்டி நடைபெற்றது.;

Update:2023-10-27 02:00 IST

மணமேல்குடி அருகே பி.ஆர்.பட்டிணத்தில் மீனவர் பொதுநல மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் கலந்து கொண்டு மன்றத்தை திறந்து வைத்தார். இதையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 படகுகள் கலந்து கொண்டன. போட்டியில் ஒரு படகுக்கு 6 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். ஒரு படகில் ஒரு பாய், ஒரு பலகை மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகளோடு நடத்தப்பட்டது. மேலும், படகு புறப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தூரம் படகுகள் சென்று வர வேண்டுமென தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படகுகளை செலுத்தினர்.

இதையடுத்து, படகு போட்டியில் கலந்து கொண்டு முதல்பரிசை பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை ஈஸ்வரன் அணியினருக்கு ரூ.35 ஆயிரமும், 2-ம் பரிசாக ராமநாதபுரம் நம்புதளை ஆறுபடை அணியினருக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ராமநாதபுரம் தொண்டிபுதுக்குடி கருப்பையா ரத்தினவேல் அணியினருக்கு ரூ.20 ஆயிரமும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. விழாவில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். படகு போட்டியை தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்