கோவில் விழாவில் எருதுகளை பலியிடும் நிகழ்ச்சி
கோவில் விழாவில் எருதுகளை பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
சிவகங்கை பழமலை நகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் ஆவணி மாத திருவிழா மிகவும் பிரபலமான திருவிழாவாகும். இதில் காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு எருதுகள், ஆடுகள் ஆகியவற்றை பலிகொடுத்து அதன் ரத்தத்தை குடித்தும், தங்களது குல தெய்வங்கள் மீது தெளித்தும் கொண்டாடுவது வழக்கம். ஆண்டிற்கு ஒரு முறை அல்லது 5 ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி அங்குள்ள மைதானத்தில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு காளியம்மன், மதுரை மீனாட்சி, மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளின் பாரம்பரிய சிலைகளை வைத்து விழா தொடங்கப்பட்டது.
தொடர்ந்து 3-ம் நாள் விழாவான நேற்று காளியின் குடில்களின் முன் அமைக்கப்பட்ட பலிபீடத்தில் 6-க்கும் மேற்பட்ட எருதுகளை பலியிட்டு அதன் ரத்தத்தால் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்ததுடன் அதனை குடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதேபோல் அம்மன் குடில்களுக்கு முன்னர் உள்ள பலி பீடத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.