கார்த்திகை மாத பிறப்பு: சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

Update: 2022-11-17 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நேற்று அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

விரதம் தொடங்கினர்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று அய்யப்ப பக்தர்கள் காலை முதலே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்கள், முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள், விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர். குருசாமிகள் பக்தர்களுக்கு மாலையை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

இதன் காரணமாக தர்மபுரி கடைவீதி பகுதிகளில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காவி வேட்டி, துளசி மணிமாலை, ஸ்படிக மணி, சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்தது. இதேபோல் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் சாமந்தி, சம்பங்கி, அரளி, துளசி குண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சபரிமலை கோவிலுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி அய்யப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

அரூர்

இதேபோல் அரூர் 4 ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். இதேபோல் பஸ் நிலையம் காமாட்சி அம்மன் கோவில், தீர்த்தமலை அகத்தியர் ஆஸ்ரமம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர், மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்