கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானி உயிரிழப்பு...!
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானி உயிரிழந்தார்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இங்கு ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு தலைமை விஞ்ஞானியாக ரஷ்யாவைச் சேர்ந்த கிளினின் கோ வடின் இருந்தார். நேற்று முன்தினம் இரவில் திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அணுவிஜய் நகரியத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 62.
இதையடுத்து அவரது உடலை இந்தியாவில் உள்ள ரஷியத் தூதரகம் மூலமாக ரஷ்யா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.