7 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குச்சீட்டு அச்சடிக்க அனுப்பி வைப்பு
7 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக வாக்குச்சீட்டு அச்சடிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்சி அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவிக்கும், கட்சி அடிப்படை இல்லாமல் வெட்டுக்காடு, மேலப்பட்டு, நெடுங்குடி, தென்னங்குடி, தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு என்பது வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு கிடையாது. மொத்தம் 119 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
இந்த நிலையில் தேர்தலில் வாக்குப்பதிவிற்காக வாக்குச்சீட்டு அச்சடிப்பதற்கு வசதியாக கட்சி அடிப்படையிலான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்களின் பெயர், சின்னம் குறித்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர் பதவிக்கும் வாக்குச்சீட்டு அச்சடிக்க அரசு சார்ந்த அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும்.
இதற்கிடையில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் நடைபெறும் கிராமங்களில் பிரசாரம் களை கட்ட தொடங்கி உள்ளது.