ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

தொகுப்பூதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update:2023-08-29 00:15 IST
ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

மனு

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிமுருகன், மாநில செயலாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பிரதமர் வீடு கட்டும் திட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியில் தமிழகம் முழுவதும் 1236 பேரும், கடலூர் மாவட்டத்தில் 155 பேரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 980 வீடுகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் எங்களுக்கு பணி வழங்கப்பட்டது. இதற்காக பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்து, 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள எங்களை பணியில் சேர்த்தார்கள். நாங்கள் பணியில் சேர்ந்தபோது 33 சதவீத வீடுகள் முடிக்கப்பட்டது. நாங்கள் சேர்ந்த பிறகு 78 சதவீதம் வீடுகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதுநாள் வரை எங்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரத்து 500 வெளி ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

தொகுப்பூதியம்

தற்போது இந்த ஊதிய முறையை மாற்றி தவணை முறையில் ரூ.300, ரூ.450 என்று மதிப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் எங்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும். இந்த முறையை மாற்றி எங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பள பாக்கியும் உள்ளது. அந்த சம்பள பாக்கியையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்