அரசு வழங்கும் மாதம் ரூ.1000 எங்களுக்கு கிடைக்குமா?

தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரேஷன் கடைகளுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர்.

Update: 2023-07-08 15:54 GMT

ரேஷன் கடைகள்

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயனடையும் பெண்களை தேர்வு செய்வதற்கு பல்வேறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2002 செப்டம்பர் 15-ந்தேதிக்கு முன் பிறந்த பெண்கள் ரேஷன் கடைகளின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்துக்கு ஒரு பெண்ணுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள் வைத்துள்ள குடும்பங்கள் உள்ளிட்டவர்கள் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாகிறார்கள்.

சொற்ப ஓய்வூதியம்

அதேநேரத்தில் வருமான வரி செலுத்துபவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம், 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பினருக்கு உரிமைத் தொகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், தங்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்குமா? என்று தெரிந்து கொள்வதற்காக பல பெண்கள் ரேஷன் கடைக்கு வந்தனர். அவர்களுக்கு சரியாக பதிலளிலக்க முடியாமல் ஊழியர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் சொற்ப ஓய்வூதியம் பெறும் முதியோர், விதவைகள் ஆகியோருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது வீடுகளில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது என்ற தகவல் பலருக்கு ஷாக் அடிக்கும் விஷயமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்