சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
சென்னையில் தங்கியிருக்கும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்தி செல்வதாக பெரியளவில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேடவாக்கம் பகுதியில் 7 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும் பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது பொய்யானது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் மிகவும் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் இன்று அறிக்கை வெளியிட்டனர்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வதந்தியை பரப்பியவர்களை தேடி வருகிறார்கள். சென்னை சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டன் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் சுற்றித்திரிந்த வடமாநில தொழிலாளி ஒருவரை, குழந்தையை கடத்துபவர் என்று கருதி அவரை அப்பகுதி பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த வடமாநில தொழிலாளி, மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு போதையில் தெருவில் சுற்றியதாகவும், அவர் குழந்தையை கடத்துபவரில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.