பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தப்பி ஓடியதாக வதந்தி

குளித்தலையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தப்பி ஓடியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-21 17:47 GMT

தவறாக நடக்க முயன்ற வாலிபர்

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் 31 வயது பெண் பாத்திரம் விளக்கி கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் நீந்தியபடி அங்கு வந்த நாமக்கல் மாவட்டம் கீழப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 30) என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.அப்போது அந்த பெண் சத்தம் போடவே அங்கிருந்த வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து தண்ணீரில் இருந்த சிவக்குமாரை தேடி பிடித்து கரைக்கு கொண்டு வந்து தாக்கினர்‌. அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் இச்சம்பவத்தை பார்த்து சிவக்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர்.

கைது

அப்போது அங்கு ஏராளமான நபர்கள் கூடி சிவக்குமாரை தாக்கிய போது போலீசாரும் தாக்கப்பட்டனர். போலீசாரின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் மீட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வதந்தி பரவியது

இந்தநிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவக்குமாரை நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்துவதற்காக குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக கட்டிடத்தின் அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் சிவக்குமாரை குளித்தலை கிளை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் தப்பி ஓடி விட்டதாக பெரும் வதந்தி நேற்று காலை முதல் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது.மேலும் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சிவக்குமாரை தேடி வந்ததாகவும் கூறப்பட்டது. கைதி தப்பி ஓடியது உண்மையா? பொய்யா? என்று பலர் சந்தேகத்துக்கு இடமான கேள்விகளை எழுப்பி வந்தனர்.

தப்பி ஓடவில்லை

இதுகுறித்து குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதரிடம் கேட்டபோது, பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிவக்குமாரை நேற்று முன்தினம் நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார், சிவக்குமார் தப்பி ஓடவில்லை என்றார்.பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிவக்குமார் பொதுமக்களால் தாக்கப்பட்டபோது போலீசாரும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், சிவக்குமார் தப்பி ஓடியதாக கூறப்பட்ட வதந்தி அதைவிட பெரும் பரபரப்பை குளித்தலை பகுதியில் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்