ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்-சாலைமறியல்

தேவகோட்டையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2022-12-05 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலைமறியல் செய்தனர்.

விவசாயிகள்

தேவகோட்டை அருகே உள்ள முத்துநாட்டு கண்மாய் விவசாயிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தேவகோட்டை ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஆர்.டி.ஓ. பால்துரையை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா முத்துநாட்டு கண்மாய் 857 ஏக்கர் பரப்பளவு உள்ளது. 1100 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாய்க்கு தென்பகுதியில் இருந்து தேனாற்றில் இருந்து நீர்வரத்து உள்ளது. இதனால் முத்துநாட்டு கண்மாய் நிறைந்து அதன் பின்னர் கலுங்கு வழியாக உபரிநீர் மீண்டும் தேனாற்றில் கலந்து விடும்.

வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுப்பணி துறையில் இருந்து அதிகாரிகள் வந்திருந்து அந்த கண்மாய் எதுவனையை வெட்டி விடுவார்கள். தண்ணீர் வடிந்ததும் பொதுப்பணித்துறையினரே எதுவணையை அடைத்து விடுவார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையாகும். அதற்கு மாறாக கடந்த 2-ந் தேதி தேவகோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் முத்துக்கண்ணுமாய்க்கு வந்து எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கண்மாய் எதுவணையை 18 மீட்டர் அளவிற்கு வெட்டி விட்டுள்ளனர்.

மனு

இதுபற்றி பாசன விவசாயிகள் சென்று கேட்டபோது வருவாய் துறை கணக்கில் இருக்கிறது. அதனால் வெட்டினோம் என்கின்றனர். ஆனால் அதற்கான கணக்குகள் எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக இது போல் பதில் கூறி கண்மாய் கரையை முறித்து விட்டுள்ளனர்.

ஆனால் பொதுப்பணித்துறையினர் பல தடவை கண்மாய் மராமத்து செய்யும் போதெல்லாம் எதுவணையில் கரை போட்டு கொடுத்து வந்துள்ளனர். அவர்களே தற்போது கரையை வெட்டியும் விட்டுள்ளனர்.

எனவே கண்மாய் கரையை வெட்டிவிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளே மீண்டும் கரையை மூடி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. பால்துரை இது பற்றி பேசி சுமுகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் சற்று நேரத்தில் தேவகோட்டை ராம் நகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பாசன விவசாயிகள் வந்தனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு கரையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் நீர்வளத்துறை மணிமுத்தாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோட்ட செயற்பொறியாளர் குமார் மற்றும் ஆர்.டி.ஓ பால்துரை ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றின் எதுவனை மூடி தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்