பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது
பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது.;
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருந்தது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அதற்கு அனுமதி வழங்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
மேலும், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீசார் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்தது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு மேலும் 44 இடங்களில் நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால் நேற்று 44 இடங்களில் நடைபெற இருந்த அணிவகுப்பு ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். தள்ளிவைத்தது. இதைத்தொடர்ந்து காந்தி ஜெயந்தி, விஜயதசமி, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த விழா என இந்த விழாக்களை முன்னிட்டு பெரம்பலூரில் திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை கஞ்சமலை சித்தர் திருமரபில் வந்த பொன்னம்பல சுவாமி மடாதிபதி திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீருடையில் 250-க்கும் மேற்பட்டோர்...
இதில், 250-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில், ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடியை ஏந்தி வந்தார். ஊர்வலத்தில் பாரத தாய், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர், தேசிய தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோர் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு ஒரு வாகனத்தில் முன்பு வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. நாலாபுறமும் போலீசார் அணிவகுத்து வந்தனர்.
அமைப்பின் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு சென்றது. பின்னர் அங்கிருந்து திரும்பி சங்குபேட்டை வந்து கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே சென்று நிறைவடைந்தது.
மலர்தூவி வரவேற்பு
அணிவகுப்பு ஊர்வலத்தை ஏராளமானோர் சாலையோரத்தில் வரிசையாக நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களில் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டு ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர்களை தூவி மரியாதை அளித்து ஊர்வலத்தை வரவேற்றனர். பின்னர் மேற்கு வானொலி திடல், சன்னதி தெருவில் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயராமன் தலைமை தாங்கி பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருச்சி கோட்ட தலைவர் கிருஷ்ண முத்துசாமி அணிவகுப்பு ஊர்வலம் பற்றி சிறப்புரை ஆற்றினார். முடிவில் அமைப்பினர் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கார்த்திக்கேசவன் நன்றி கூறினார். இதில் பா.ஜனதா மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் அமைதியாக நடந்து முடிந்தது.