மதுரையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
ஆர்.எஸ்.எஸ். சார்பில் வீர சிவாஜியின் 350-வது முடிசூடிய விழா மற்றும் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரணி நடந்தது. மதுரையிலும் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் பேரணி நடந்தது.
அதாவது, வண்டியூர் பெருமாள் கோவிலில் தொடங்கிய இந்த பேரணி வழியாக அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் வரை சென்று, நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், அதற்கான சீருடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த பேரணியையொட்டி, வழிநெடுகிலும் மதுரை வடக்கு துணை கமிஷனர் அரவிந்தன், மதுரை தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, அண்ணாநகர் பகுதியில் பொதுக்கூட்டமும் நடந்தது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஊர்வலமானது திருமங்கலம் ராஜாஜி சிலையிலிருந்து புறப்பட்டு விருதுநகர் ரோடு, உசிலம்பட்டி ரோடு, சந்தைப்பேட்டை வழியாக முன்சீப் கோர்ட்டு ரோடு, ராஜாஜி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ராஜாஜி சிலையை வந்தடைந்தனர்.
முன்னதாக ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொடியேற்றப்பட்டு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஊர்வலத்தை ராயபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது ஆங்காங்கே மகளிர் அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, மலைச்செல்வி உள்பட 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்பினர் பூ தூவி வரவேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் திருமங்கலம் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊர்வலம் சென்ற பின்னர் போக்குவரத்து சீரானது.
இதை தொடர்ந்து ராஜாஜி சிலை அருகே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.