பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதா..? வீடியோவை உடனே நீக்குங்கள்: தி.மு.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தி வெளியிட்ட வீடியோவை திமுக ஐ.டி. விங் நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-23 12:27 GMT

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக கட்சியின் ஐ.டி.விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22-9-2023 அன்று வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில், "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இவன்மூலம் புல்புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்" என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

1948ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டபோது அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க 1966ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல்.கபூர் கமிஷன், 407 ஆவணங்கள், 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை, இந்த கொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திமுகவின் ஐ.டி. விங் தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு ஜனநாயக அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திமுக இந்த பதிவை உடனே நீக்குவதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் திமுக ஐ.டி. விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்