புதுக்கோட்டையில் ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது

புதுக்கோட்டையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

Update: 2022-11-04 18:54 GMT

தனிப்படை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருவப்பூர் பகுதியில் மொபட்டில் சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒருவரை பின்தொடர்ந்து சென்றனர்.

அவர் மொபட்டில் புகையிலை பொருட்களை வைத்து கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் பூங்கா நகரை சேர்ந்த வசந்தகுமார் (வயது 33) என்பதும், அவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

கூரியர் மூலம் கொள்முதல்

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பூங்காநகர் சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 262 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும். இதையடுத்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

கைதான வசந்த்குமார் ஏற்கனவே புகையிலை பொருட்களை விற்றது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கூரியர் மூலம் கொள்முதல் செய்து, அதனை வீட்டில் பதுக்கி வைத்து மாவட்டத்தின் பல்வேறு கடைகளுக்கும், பக்கத்து மாவட்டமான சிவகங்கையிலும் கடைகளுக்கு விற்று வந்தது தெரியவந்தது. டீலர் போல வசந்தகுமார் செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்