புதிய மின்மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் -தமிழக அரசு அறிவிப்பு
புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகளை வாங்குவதற்கு மானியம் வழங்குகிறது.
அதாவது பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ரூ.15 ஆயிரம் மானியம்
புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்கும்போது அதன் மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.15 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்தத்தொகை மானியமாக வழங்கப்படும்.
திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவியுள்ள விவசாயிகள் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட விருப்பமுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலமாகவோ விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.