ரூ.96½ கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.96½ கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.;
ஈரடுக்கு பஸ் நிலையம்
சேலம் மாநகரின் மைய பகுதியில் உள்ள சேலம் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.96 கோடியே 53 லட்சம் மதிப்பில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மறுசீரமைக்கப்பட்டது. இதே போல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.33 கோடியே 60 லட்சத்தில் நேரு கலையரங்கமும், ரூ.19 கோடியே 71 லட்சத்தில் பெரியார் பேரங்காடியும், ரூ.14 கோடியே 97 லட்சத்தில் வ.உ.சி. மார்க்கெட்டும், ரூ.10 கோடியே 58 லட்சத்தில் போஸ் மைதான வணிக வளாகமும் மறுசீரமைக்கப்பட்டது.
பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஈரடுக்கு பஸ் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பஸ் நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரடுக்கு பஸ் நிலையம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரடுக்கு பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நேரு கலையரங்கம்
ஈரடுக்கு பஸ் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பஸ் நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை ரிமோட் மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அவர் நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி. மார்க்கெட், போஸ் மைதான வணிக வளாகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். இதையடுத்து ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களை கொடியசைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து கருப்பூரில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அண்ணா பூங்காவில் இருந்து ஈரடுக்கு பஸ் நிலையம் வரும் வழியில் வழிநெடுக நின்ற தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்து வணக்கம் தெரிவித்தபடியே வந்தார்.