வால்பாறை பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள்
வால்பாறை பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
வால்பாறை
வால்பாறை பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்டம்
வால்பாறை நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலு, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க காற்றில் உள்ள ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கவுன்சிலர்களுக்கு தனியார் நிறுவனம் படக்காட்சி மூலம் விளக்கியது. இந்த திட்டம் மூலம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதியில் இந்த திட்டம் மூலம் அதற்கான எந்திரம் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள்
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் ரூ.8 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறிய உயர்மின் கோபுர தெருவிளக்கு அமைப்பது, மயானக்கூரைகள் அமைப்பது, பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பு, நடைபாதை, கால்வாய் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், குடிதண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு, தடுப்பு சுவர்கள் கட்டுதல், சத்துணவு மையங்கள் பராமரிப்பு செய்தல், கழிப்பிடங்கள் பராமரிப்பு, கழிவு நீர் சாக்கடை அமைத்தல், கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியதாவது:-
முடீஸ், வெள்ளமலை, சேக்கல்முடி புதுக்காடு, சோலையாறு நகர், உபாசி, மானாம்பள்ளி ஆகிய எஸ்டேட் பகுதிகளின் தடைப்பட்டுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டகட்டி பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நவீன கழிப்பிடம் அமைக்க வேண்டும். மலைவாழ் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.
மேலும் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் திறப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக கவுன்சிலர்கள் முன் வைக்கும் கோரிக்கைளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதற்கு விளக்கம் அளித்து நகராட்சி ஆணையாளர் பாலு பேசியதாவது:-
அனைத்து வளர்ச்சி பணிகள் மற்றும் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில வளர்ச்சி பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அலுவலர்களிடம் இருந்தும், அரசிடம் இருந்தும் உரிய அனுமதிகள் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இதற்காக நகராட்சி பணிமேற்பார்வையாளரை சென்னைக்கு அனுப்பி விரைவாக அனுமதிகள் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எஸ்டேட் பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகம் பழுதடைந்த சாலைகளை முறையாக நகராட்சிக்கு ஒப்படைத்தால் பணிகள் மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.