வாகன உதிரிபாக கடையில் ரூ.75 ஆயிரம் திருட்டு
வாகன உதிரிபாக கடையில் ரூ.75 ஆயிரம் திருட்டுபோனது.;
திருச்சி:
பணம் திருட்டு
திருச்சி கருமண்டபம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 34). இவர் கருமண்டபம் மெயின்ரோட்டில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.
மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரம், நிரப்பப்படாத காசோலை புத்தகம், கண்காணிப்பு கேமரா ரெக்கார்டர், மோடம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
அப்போது, பக்கத்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்ம நபர் ஒருவர், பிரபாகரனின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.