மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 லட்சம் மோசடி
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 லட்சம் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்,:
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 லட்சம் மோசடி நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான வெங்கடாசலம் என்ற சுரேஷ். இவர் நேற்று தன் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கடந்த 2020-ம் ஆண்டு வரை கன்னியாகுமரியில் கடை நடத்தி வந்தேன். அப்போது கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு தம்பதி உள்பட 3 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் எனது கடையை வைத்து வங்கியில் கடன் எடுத்து தருவதாக கூறினர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். இதை தொடர்ந்து எனது பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி ரூ.2 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் அந்த பணத்தை எனக்கு தரவில்லை.
இதே போல எனக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தையும் பவர் பத்திரம் எழுதி வாங்கி மோசடி செய்து விட்டனர். மேலும் எனது 108 கிராம் தங்க நகையையும் வாங்கி விட்டு திரும்ப தரவில்லை. படிப்பறிவு இல்லாத எங்களை பல வழிகளில் 3 பேரும் திட்டமிட்டு மோசடி செய்து விட்டார்கள்.
அந்த வகையில் மொத்தம் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். என்னிடம் நன்றாக பழகி திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.