ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்த வாலிபரிடம் ரூ.67½ லட்சம் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்த வாலிபரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.67½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-11-22 23:47 GMT

நசரத்பேட்டை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை வரும் பஸ்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை போலீசார் நேற்று திருமழிசை கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த வந்த பஸ்சில் சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

நகை வாங்க

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உமேஷ் (வயது 26), என்பதும், அந்த பணத்தை சென்னையில் நகை வாங்க கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இ்ல்லை.

இதையடுத்து பணத்துடன் அவரை கீழே இறக்கிய போலீசார், இதுபற்றி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், உமேஷிடம் இருந்த பணத்தை, பணம் என்னும் எந்திரம் மூலம் எண்ணி பார்த்தனர்.

ரூ.67½ லட்சம் பறிமுதல்

அதில் ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் இருந்ததை கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் அந்த பணத்தை சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், உமேசை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்