அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.62 லட்சம் மோசடி
அதிக வட்டி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் வாலிபர் மனு அளித்தார்.;
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்கள் அளித்தனர்.
அவற்றை போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் அதுதொடர்பாக கேட்டறிந்தனர்.
ரூ.62 லட்சம் மோசடி
கூட்டத்தில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த வாலிபர் நவீன் அளித்த மனுவில், சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவர் காட்பாடியில் உள்ள நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் என கூறினார். அதை நம்பி அந்த நிறுவனத்தில் 6 தவணைகளாக ரூ.62 லட்சம் வரை முதலீடு செய்தேன். அவர்கள் எனக்கு வட்டியாக 4 மாதங்கள் தலா ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் என ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்தனர். அதன்பின்னர் வட்டி கொடுக்கவில்லை.
இதுகுறித்து நிதிநிறுவனத்திடம் கேட்டதற்கு ஆட்களை வைத்து தாக்குகின்றனர். தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களிடம் இருந்து எனது பணத்தை பெற்றுத் தர வேண்டும். மேலும் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆசிரியர் வேலை
காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தை சேர்ந்த பாரத்ராஜ் அளித்த மனுவில், நான் கல்லூரி படிக்கும்போது கண்ணமங்கலத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தெரிந்த நபர்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலைக்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் வழங்கினேன்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எந்த விபரமும் இல்லாத பணியானை வழங்கினர். அதுபற்றி விசாரித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரிடம் கேட்பதற்கு தொடர்பு கொண்டபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மகனை மீட்டுத்தர வேண்டும்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் வணிகர்கள் அளித்த மனுவில், வேலூர் ஜவுளி மற்றும் ரெடிமேடு வணிகர் சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ். கோவில் தெரு, பேரி பக்காளியம்மன் தெரு, பேரி காளியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.2 லட்சம் கடந்த 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த பகுதிகளில் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது.
இந்த பகுதி தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பாத்திரங்கள் விற்பனை செய்யும் பகுதியாகும். எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அளித்த மனுவில், எனக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி நகைகளை பறித்துக் கொண்டு, என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். எனது கணவர் தற்போது 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது. எனவே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகனை மீட்டு தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.